Friday, January 25, 2008

பங்குச்சந்தை பிரச்சனைகள், இன்றைய அமெரிக்க வரி விலக்கு

சென்சக்ஸ் நேற்று சரிவு, நேற்று முதல் நாள் உயர்வு, அதற்கும் முன்பு வரலாறு காணாத சரிவு...

இன்று ?

இந்திய முதலீட்டாளர்கள் பயங்கர பீதியில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு முதல் இந்திய பங்குச்சந்தைக்கு படையெடுத்த நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களை இந்தச் சரிவு பீதி கொள்ள வைத்திருக்கிறது. அவர்கள் பங்குச்சந்தையில் எதிர்கொண்ட முதல் சரிவு இது என்பதால் பலர் இப்பொழுது பங்குச்சந்தையை அச்சமுடன் பார்க்கிறார்கள். ஆனால் ஹர்ஷத் மேத்தா ஊழலுக்கு பிறகு பங்குச்சந்தை சரிந்தது போலவோ, 2001ம் ஆண்டுக்கு பிறகு பங்குச்சந்தை சரிந்தது போலவோ பெரிய அளவில் பொருளாதார சூழல் மோசமில்லை. ஆனாலும் முதல் முறையாக பங்குச்சந்தையை எட்டிப் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இயல்பான அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் பல பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு அமெரிக்க அரசாங்கம் கடந்த சில நாட்களாக அமெரிக்க பொருளாதார சூழலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முதலில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இது வீட்டுக் கடன் வட்டியை குறைக்கவும், வீட்டுக் கடன் தொடர்பான பிரச்சனைகளை களையவும், பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரிக்கவும் வகை செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நேற்று அமெரிக்க காங்கிரஸ் (செனட்) தலைவர்கள் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மக்களுக்கு வரி விலக்கு அளிக்கும் ஒரு தீர்வை இவர்கள் முன்வைத்துள்ளனர். அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான ஜனநாயக்கட்சியும், குடியரசு கட்சியும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது செனட்டில் நிறைவேற்றப்பட வேண்டும்.

Economic Stimulus Deal எனப்படும் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்க மக்களுக்கு அவர்கள் எதிர்பாராத சிறு பணம் வரி விலக்காக கிடைக்கும். குறைந்தபட்சம் 600டாலர் முதல் அதிகபட்சமாக $1200 வரை கிடைக்கும். குழந்தைகள் உள்ளவர்கள் ஒரு குழந்தைக்கு $300 என்றளவில் வரி விலக்கு கிடைக்கும். இது பொருளாதாரத்திற்கு ஊட்டத்தை அளிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க மக்கள் பொருளாதாரம் குறித்த அச்சம், சரிந்து வரும் பங்குச்சந்தைகள், சரிந்து வரும் ரியல் எஸ்டேட் மார்க்கெட் போன்றவை காரணமாக தங்கள் செலவுகளை குறைக்கத்தொடங்கியிருப்பதான ஒரு அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்க மக்கள் செலவழிக்கவில்லையென்றால் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். பொருளாதாரம் தேக்கம் (Recession) அடைந்து விடும்.

இப்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு காரணமாக அமெரிக்க மக்களுக்கு வரி விலக்காக கிடைக்கும் பணம் செலவழிக்கப்படும். பணம் செலவழிக்கப்படும் பொழுது அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு தேவைகளை (Demands) ஏற்படுத்தும். தேவைகள் ஏற்படும் பொழுது உற்பத்தி அதிகரிக்கும். அது பொருளாதாரத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு இப்பொழுது வெளியாகி உள்ளது.

இது போன்ற அறிவிப்பு 2001ம் ஆண்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளித்து விடாது. ஆனாலும் இது ஆரம்பம் தான், அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேவைப்படும் அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளார்கள். அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியாக கூடும்.

இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பிற பங்குச்சந்தைகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு பாசிட்டிவ் செண்டிமெண்ட்டை கொடுக்கும். நேற்று (ஜனவரி 24) அமெரிக்க பங்குச்சந்தை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

2 comments:

Anonymous said...

BSE is up by 662 points
NSE is up by 226 points

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in