Friday, January 25, 2008

பங்குச்சந்தை பிரச்சனைகள், இன்றைய அமெரிக்க வரி விலக்கு

சென்சக்ஸ் நேற்று சரிவு, நேற்று முதல் நாள் உயர்வு, அதற்கும் முன்பு வரலாறு காணாத சரிவு...

இன்று ?

இந்திய முதலீட்டாளர்கள் பயங்கர பீதியில் இருக்கின்றனர். கடந்த ஆண்டு முதல் இந்திய பங்குச்சந்தைக்கு படையெடுத்த நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களை இந்தச் சரிவு பீதி கொள்ள வைத்திருக்கிறது. அவர்கள் பங்குச்சந்தையில் எதிர்கொண்ட முதல் சரிவு இது என்பதால் பலர் இப்பொழுது பங்குச்சந்தையை அச்சமுடன் பார்க்கிறார்கள். ஆனால் ஹர்ஷத் மேத்தா ஊழலுக்கு பிறகு பங்குச்சந்தை சரிந்தது போலவோ, 2001ம் ஆண்டுக்கு பிறகு பங்குச்சந்தை சரிந்தது போலவோ பெரிய அளவில் பொருளாதார சூழல் மோசமில்லை. ஆனாலும் முதல் முறையாக பங்குச்சந்தையை எட்டிப் பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு ஏற்படும் இயல்பான அச்சம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் பல பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவிற்கு பிறகு அமெரிக்க அரசாங்கம் கடந்த சில நாட்களாக அமெரிக்க பொருளாதார சூழலை மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

முதலில் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இது வீட்டுக் கடன் வட்டியை குறைக்கவும், வீட்டுக் கடன் தொடர்பான பிரச்சனைகளை களையவும், பணப்புழக்கத்தை (Liquidity) அதிகரிக்கவும் வகை செய்யும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

நேற்று அமெரிக்க காங்கிரஸ் (செனட்) தலைவர்கள் மற்றொரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். மக்களுக்கு வரி விலக்கு அளிக்கும் ஒரு தீர்வை இவர்கள் முன்வைத்துள்ளனர். அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளான ஜனநாயக்கட்சியும், குடியரசு கட்சியும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இது செனட்டில் நிறைவேற்றப்பட வேண்டும்.

Economic Stimulus Deal எனப்படும் இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்க மக்களுக்கு அவர்கள் எதிர்பாராத சிறு பணம் வரி விலக்காக கிடைக்கும். குறைந்தபட்சம் 600டாலர் முதல் அதிகபட்சமாக $1200 வரை கிடைக்கும். குழந்தைகள் உள்ளவர்கள் ஒரு குழந்தைக்கு $300 என்றளவில் வரி விலக்கு கிடைக்கும். இது பொருளாதாரத்திற்கு ஊட்டத்தை அளிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்க மக்கள் பொருளாதாரம் குறித்த அச்சம், சரிந்து வரும் பங்குச்சந்தைகள், சரிந்து வரும் ரியல் எஸ்டேட் மார்க்கெட் போன்றவை காரணமாக தங்கள் செலவுகளை குறைக்கத்தொடங்கியிருப்பதான ஒரு அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்க மக்கள் செலவழிக்கவில்லையென்றால் அது பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். பொருளாதாரம் தேக்கம் (Recession) அடைந்து விடும்.

இப்பொழுது வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பு காரணமாக அமெரிக்க மக்களுக்கு வரி விலக்காக கிடைக்கும் பணம் செலவழிக்கப்படும். பணம் செலவழிக்கப்படும் பொழுது அது அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு தேவைகளை (Demands) ஏற்படுத்தும். தேவைகள் ஏற்படும் பொழுது உற்பத்தி அதிகரிக்கும். அது பொருளாதாரத்திற்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு இப்பொழுது வெளியாகி உள்ளது.

இது போன்ற அறிவிப்பு 2001ம் ஆண்டும் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவிப்பு பொருளாதாரத்திற்கு பெரிய ஊக்கத்தை அளித்து விடாது. ஆனாலும் இது ஆரம்பம் தான், அமெரிக்க பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல தேவைப்படும் அத்தனை நடவடிக்கைகளையும் எடுப்போம் என காங்கிரஸ் தலைவர்கள் கூறியுள்ளார்கள். அடுத்த வாரம் மேலும் சில அறிவிப்புகள் வெளியாக கூடும்.

இந்தியப் பங்குச்சந்தை

இந்தியப் பங்குச்சந்தை மற்றும் பிற பங்குச்சந்தைகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு பாசிட்டிவ் செண்டிமெண்ட்டை கொடுக்கும். நேற்று (ஜனவரி 24) அமெரிக்க பங்குச்சந்தை உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Wednesday, January 23, 2008

Sub-prime, Mortgage, அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆபத்தா ?

நேற்று காலை (ஜனவரி 22) அமெரிக்க பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே டவ் ஜோன்ஸ் (Dow Jones industrial average) கடுமையாக சரிந்தது. சுமார் 465 புள்ளிகள் சரிவை டவ் ஜோன்ஸ் எதிர்கொண்டது. பிறகு ஒரளவு இந்த சரிவு மீட்கப்பட்டது. இதனால் ஆசிய பங்குச்சந்தைகளும், இந்தியப் பங்குச்சந்தைகளும் உயரக்கூடும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

ட்வ் ஜோன்ஸ் இறுதியாக 128 புள்ளிகள் சரிவை அடைந்திருந்தது.

யாருமே எதிர்பாராத வகையில் அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் (Federal Reserve) 75 புள்ளிகள் (75 basis points) அளவுக்கு வட்டி விகிதத்தை (Federal funds rate) குறைத்திருக்கிறது. அதாவது .75% . வட்டி விகிதம் 4.25% இருந்து 3.5% அளவுக்கு குறைந்திருக்கிறது. எளிமையாக விளக்கம் தர வேண்டும் என்றால் Federal funds rate என்பது அமெரிக்காவில் உள்ள வங்கிகள் தங்களுக்குள் ஒரு நாளுக்கு கடன் வழங்குவதற்கான வட்டி விகிதம். இந்த வட்டி விகிதம் தவிர Discount Rate என்னும் வட்டி விகிதத்தையும் பிடரல் ரிசர்வ் குறைத்திருக்கிறது. Discount Rate என்பது பிடரல் ரிசர்விடம் இருந்து வங்கிகள் குறுகிய காலத்திற்கு பெறும் வட்டி விகிதம். இது தற்பொழுது 4% என்றளவிற்கு குறைந்துள்ளது.

இது போன்று அதிரடியாக பிடரல் ரிசர்வ், வட்டி விகிதத்தை குறைப்பது வழக்கமில்லை. இவ்வளவு பெரிய அளவிளாலன வட்டி குறைப்பு 1990ம் ஆண்டு தான் அமெரிக்காவில் நடந்திருகிறது. அதுவும் அவசரமாக கூடி தற்பொழுது வட்டி விகிதம் குறைக்கப்பட்டது போன்று 2001ம் ஆண்டு நியூயார்க் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பொழுது தான் நிகழ்ந்தது. பென் பெர்னான்கே தலைமையிலான அமெரிக்காவின் பிடரல் ரிசர்வ் உலகெங்கும் பங்குச்சந்தைகள் சரியத்தொடங்கியதும் அவசரமாக திங்கள் இரவு கூடி விவாதித்து வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. அமெரிக்காவில் திங்களன்று விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு எமர்ஜன்சி (Emergency) காலம் போல வட்டி விகிதம் குறைக்கப்பட்டது அமெரிக்க பொருளாதாரம் எதிர்பார்த்த தேக்கத்தை (Recession) நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதோ என்ற அச்சத்தை இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கிறது. ஆனாலும் தற்காலிகமாக பிடரல் ரிசர்வின் அறிவிப்பு பங்குச்சந்தைகளுக்கு ஊக்கம் அளித்திருக்கிறது. இந்த அறிவிப்பிற்கு பிறகு ஐரோப்பிய பங்குச்சந்தைகள் சற்றே உயர்ந்தன. அமெரிக்க பங்குச்சந்தைகளும் இழந்த சரிவை மீட்டிருக்கின்றன.

ஆசிய பங்குச்சந்தைகளிலும், இந்திய பங்குச்சந்தைகளிலும் இந்த மாற்றம் எதிரொலிக்க கூடும்.

ஆனால் அமெரிக்க பொருளாதாரம் உண்மையிலேயே தேக்க நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறதா என்ற கேள்வியும், அதற்கான விடையும் தான் உலகப் பங்குச்சந்தைகளின் போக்கினை அடுத்து வரும் நாட்களில் தீர்மானிக்கும்.

அமெரிக்கா பிடரல் ரிசர்வின் வழக்கமான கூட்டம் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. அந்த கூட்டத்தில் இன்னும் வட்டி விகிதம் குறைக்கப்படக்கூடும் என தெரிகிறது. இந்த வட்டி குறைப்பு எவ்வாறு அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் என்ற கேள்வி இயல்பானது தான். அதற்கு விடையை அமெரிக்காவின் பொருளாதாரம் குறித்து விரிவாக எழுதினால் தான் விளக்க முடியும். ஆனால் முழுமையாக அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனைகளை இந்த வட்டி விகித குறைப்பு மட்டும் சரி செய்து விட முடியாது.

அமெரிக்க பொருளாதார தேக்கம்

தற்பொழுது வீட்டுக்கடன் வட்டி விகிதம் 7.25% இருந்து 6.50% அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் வீட்டுக்கடனை செலுத்த முடியாமல் தங்கள் வீடுகளை இழக்கும் நிலையில் உள்ளவர்களுக்கு இது பலனளிக்கும் என பிடரல் ரிசர்வ் நம்புகிறது. அமெரிக்காவின் மார்ட்கேஜ் (Mortgage) சார்ந்த சப் பிரைம் (Sub-prime) கடனால் ஏற்பட்டிருக்கும் கடன் பிரச்சனைக்கு (Credit Crisis) இது ஓரளவிற்கு நிவாரணமாக இருக்க முடியுமே தவிர, இதுவே முழுமையான தீர்வாக முடியாது.

பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் இழப்புகளை அறிவித்துக் கொண்டே இருக்கின்றன. இன்று அமெரிக்காவின் முக்கியமான வங்கிகளான பேங்க் ஆப் அமெரிக்கா, வக்கோவியா போன்றவை சப் பிரைம் காரணமாக இழப்புகளை அறிவித்து உள்ளன. இவை தவிர பல அமெரிக்க நிறுவனங்கள் அளவுக்கு அதிகமான இழப்புகளை அறிவித்துள்ளன. இவை சப்-பிரைம் சார்ந்த சி.டி.ஒ (CDO - Collateralized debt obligation) பிரச்சனையால் நேர்ந்த இழப்பு. இந்த நிறுவனங்களின் இழப்பு இந்த வட்டி விகிதங்களை விட ஆழமான விவகாரம். இது அமெரிக்க நிறுவனங்கள் வீட்டு கடன் வழங்கும் விதத்தையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இன்றைய அமெரிக்க பொருளாதார சரிவிற்கும் இவை தான் காரணம்.

ஒரு சிறிய உதாரணத்தை காட்டினாலே இந்தப் பிரச்சனையின் ஆழம் புரியும்.

இந்தியாவில் வீட்டுகடன் என்றால் 10 லட்சம் கடன், அதற்கு 10% வட்டி, மாதம் இவ்வளவு ரூபாய் தவணை (EMI), குறிப்பிட்ட வருடங்களுக்கு செலுத்த வேண்டும் என மிகவும் நேரடியாக வீட்டுக்கடன் தான் இருக்கும். ஹிடன் காஸ்ட் (Hidden Cost) பெரும்பாலும் இருக்காது. அது போல 90% வங்கி கடன் கொடுத்தால் 10% நாம் முதலீடு செய்ய வேண்டும். (சில வங்கிகள் 100% கூட கொடுக்க தொடங்கியிருக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது என அமெரிக்காவில் இன்று நடக்கும் பிரச்சனைகளை கவனித்தால் புரியும்).

ஆனால் அமெரிக்காவின் மார்ட்கேஜ் (Mortgage) முறை சிக்கலானது. சற்று முன்னேறிய நிதி வடிவம். அது தான் இன்று அமெரிக்கா சந்தித்து வரும் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணம்.

உதாரணமாக பளூன் லோன் (Balloon Mortgage) என்று ஒரு கடன் உண்டு. இதில் உங்களுக்கு 80% கடன் கிடைக்கும். மீதம் உள்ள 20% உங்களிடம் இருந்தால் நீங்கள் முதலீடு செய்யலாம். இல்லையா பிரச்சனையில்லை. அந்த 20% பணத்திற்கு மற்றொரு கடன் வாங்கிக் கொள்ளலாம். அந்த 20% பணத்திற்கு வட்டி விகிதம் அதிகமாக இருக்கும். அவ்வளவு தான். முதல் 7 வருடங்கள் வட்டி மட்டும் செலுத்திக் கொண்டே இருக்கலாம். 7 வருடங்களுக்கு பிறகு நீங்கள் மறுபடியும் வேறு நிறுவனத்திடம் ரீபினான்ஸ் செய்து கொள்ளலாம் (Re-finance). அதாவது ஒரு பைசா செலவில்லாமல் ஒரு வீடு உங்களுக்கு கிடைக்கும் என்பது தான் அந்த முறை.

ரியல் எஸ்டேட் அமெரிக்காவில் கொடி கட்டி பறந்த காலத்தில் பலர் இவ்வாறு தான் வீடு வாங்கினார்கள். வங்கிகள் கடன் கொடுத்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்துவார்களா என்ற கவலை சிறிதும் இல்லாமல் பலருக்கும் கடன்களை வாரி வழங்கின. இப்படி கடன்களை வாரி வழங்கினால் அந்த வங்கிகளுக்கு பணம் வேண்டாமா ? கவலையில்லை. அதற்கும் வழி உண்டு. மார்ட்கேஜ் நிறுவனங்களிடம் இருந்து அவை மார்ட்கேஜ் செக்கியூரிட்டிஸ்க (Mortgage Securities) மாற்றம் பெற்று பெரிய நிறுவனங்களிடம் செல்லும். பெரிய நிறுவனங்கள் அதனை CDO (Collateralized debt obligation) மாற்றி வெளிநாட்டிலும், பிற நிறுவனங்களிடமும் விற்பார்கள். இப்படி பண புழக்கம் இருந்து கொண்டே இருந்தது. பலருக்கும் கடன் வழங்க முடிந்தது. இப்படி உருவான பல சிடிஓக்கள் (CDO) சப் பிரைம்களை அடிப்படையாக கொண்டவை.

கடந்த வருடம் ஆரம்பம் முதல் ரியல் எஸ்டேட் சரிய தொடங்கியது. எந்த ஒரு முதலீடு இல்லாமலும் பலர் வீடுகளை வாங்கி அனுபவித்துக் கொண்டிருந்தனர். ஏனெனில் அவர்கள் செலுத்துவது எல்லாம் வட்டி மட்டுமே. முதலீடு எதுவும் இல்லை. ரியல் எஸ்டேட் சரிய தொடங்கியதும் 100,000 டாலர் பெறுமானமுள்ள வீடுகள் 90,000, 80,000 70,000 என சரிய தொடங்கின. இப்பொழுது என்ன செய்யலாம் ? முதலீடாக ஏதாவது பணம் செலுத்தியிருந்தால் அந்த வீட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அக்கறை இருக்கும். தவணையை தொடர்ந்து செலுத்தி கொண்டு இருப்போம். ஆனால் முதலீடு செய்ய வில்லை. வெறும் வட்டி மட்டும் தான். அதுவும் 7 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் ரீபினான்ஸ் (Re-finance) செய்யும் பொழுது வட்டி விகிதம் இன்னும் அதிகரிக்கும். பலர் தங்கள் தவணையை நிறுத்திக் கொண்டனர். இது வரை அந்த வீட்டிற்காக கட்டியதை வீட்டு வாடகையாக கூட வைத்துக் கொள்ளலாமே...

இது தான் ஆரம்பம். இதன் விளைவுகள் தான் இன்று அமெரிக்கா எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள். சரியாக தவணை செலுத்தாதவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். ஆனால் சரியாக தவணையை செலுத்தியவர்கள், பணத்தை முதலீடு செய்தவர்களின் நிலை தான் பரிதாபம்.

அமெரிக்க நிறுவனங்கள் இவை வெறும் சப்-பிரைம் என கூறி தப்பித்துக் கொள்கின்றன. உண்மை அதுவல்ல. கடன் வழங்கிய முறை தவறு. அதனை சிடிஓக்களாக (CDO) விற்ற முறை தவறு. அந்த சிடிஓக்களை (CDO) மதிப்பீடு (Valuation) செய்த முறை தவறு. ரிஸ்க் மேனேஜ்மண்டில் (Risk Management) குளறுபடி.

இத்தனை குளறுபடிகள் இன்று உலகப் பொருளாதாரத்தையே அச்சம் கொள்ள வைத்திருக்கிறது.

பி.கு. இது எளிமையாக கொடுக்க முயன்ற அடிப்படை விளக்கம் மட்டுமே.

Tuesday, January 22, 2008

மும்பை பங்குச்சந்தை 2000 புள்ளிகள் சரிவு : வர்த்தகம் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது

தற்பொழுது மும்பை பங்குச்சந்தை குறியீடு சுமார் 2,029 புள்ளிகள் சரிந்துள்ளது. வர்த்தகம் தொடங்கி சில நிமிடங்களில் இந்த சரிவு நிகழ்துள்ளது. வர்த்தகம் பெரிய அளவில் நடக்க வில்லை. முதல் மூன்று நிமிடங்களில் சுமார் 800 கோடி அளவுக்கு தான் வர்த்தகம் நடந்துள்ளது. அதற்குள்ளாகவே இத்தகைய பெரிய சரிவு. இந்தச் சரிவால் பங்குச்சந்தையில் வர்த்தகம் ஒரு மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போதைய குறியீட்டு நிலவரம் - 15,576 : சரிவு 2,029 புள்ளிகள்

ஆசிய பங்குச்சந்தைகளில் நிலவும் கடும் சரிவு இந்தியப் பங்குச்சந்தையையும் பாதித்துள்ளது. கடந்த சில நாட்களில் மட்டும் இந்திய பங்குச்சந்தை 30% அளவுக்கு சரிந்துள்ளது.

இதனால் பல பங்குகள் விலை குறைந்துள்ளதால், பங்குகளை வாங்குவதற்கு இது உகந்த நேரமாக இருக்கும். அதே நேரத்தில் மொத்தமாக நம்முடைய முதலீடுகளை நுழைக்க கூடாது. சிறுக சிறுக சந்தை நிலவரத்தை கணித்து நுழைக்க வேண்டும். சந்தையில் சரிவும், உயர்வும் அடுத்த சில நாட்கள் மாறி மாறி இருக்கும்.

வர்த்தகம் 10.55 மணி அளவில் மறுபடியும் தொடங்கும் பொழுது இன்னும் சரியுமா, உயருமா என்ற கவலை தான் பல முதலீட்டாளர்களுக்கு...

Let's keep our fingers crossed

இந்தியப் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணம் என்ன ?

நேற்று இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவை எதிர்கொண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்சக்ஸ், 1409 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 496 புள்ளிகள் சரிவடைந்தது.

புள்ளிகள் கணக்கில் பார்த்தால் இந்தளவுக்கு பெரிய சரிவு இது வரை நடந்தது இல்லை. சதவீத கணக்கில் பார்த்தால் சுமார் 7% சதவீதம் சரிவு. நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்சக்ஸ் சுமார் 16,951 புள்ளிகள் என மிக மோசமான சரிவு நிலையில் இருந்தது. இந்த சரிவை ஹர்ஷத் மேத்தா ஊழல் சமயத்தில் நேர்ந்த சரிவிற்கு ஒப்பிடலாம். வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் வர்த்தகம் நடைபெற்ற பொழுது சுமார் 700 புள்ளிகள் அளவுக்கு சென்சக்ஸ் உயர்ந்தது. முடிவில் சென்சக்ஸ் 1409 புள்ளிகள் சரிவடைந்தது.

நேற்றைய சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் முதலிட்டாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று கூறும் அளவுக்கு மிக மோசமான சரிவு என்று இதனை கூறலாம்.

இவ்வளவு மோசமான சரிவு ஏற்பட முக்கிய காரணங்கள் :

ஆர்பிட்ரேஜ் - Arbitrage :

ஒரு இடத்தில் விலை குறைவாக இருக்கும் ஒரு பொருள், வேறு இடத்தில் விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வோம் ? வியபாரியாக இருந்தால் விலை குறைவான இடத்தில் வாங்கி, விலை அதிகமான இடத்தில் விற்கலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் கூட இது போல செய்ய முடியும். உதாரணமாக மும்பை பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 722 என்று இருந்து, தேசிய பங்குச்சந்தையில் விலை 735 ரூபாயாக இருந்தால், மும்பை பங்குச்சந்தையில் வாங்கி, தேசிய பங்குச்சந்தையில் விற்கலாம். இதனால் பங்கு ஒன்றுக்கு ரூபாய் 13 லாபமாக கிடைக்கும். இன்றைக்கு மும்பை பங்குச்சந்தை குறியீடு கடுமையாக சரிந்தமைக்கு இந்த வர்த்தக முறையும் ஒரு காரணம். ஆனால் வர்த்தகம் நடந்தது பங்குகளில் அல்ல. பங்குகளை அடிப்படையாக கொண்ட டிரைவேட்டிவ்ஸ் வர்த்தகத்தால் (F&O) தான் இத்தகைய கடுமையான சரிவு.

பங்குகள் கடுமையாக சரிய தொடங்கிய பொழுது இம் மாத நிப்டி பியூட்சர்சுக்கும் (Nifty Futures), நிப்டி குறியீட்டிற்கும் இடையே அதிக வித்யாசம் இருந்தது. அதாவது நிப்டி பியூட்சர்ஸ் குறைவான விலையில் இருந்தது (Nifty futures at discount). இதனை பயன்படுத்திக் கொண்டு டிரேடர்கள் (traders) பங்குச்சந்தையில் விற்று, நிப்டி பியூட்சர்சை வாங்க தொடங்கினர். அதிகளால் விற்பனை இருந்ததால் குறியீடு கடுமையாக சரிந்தது.

(டிரைவேட்டிவ்ஸ் வர்த்தகம் குறித்து வரும் நாட்களில் எழுதப் போகிறேன்)

ஸ்பெக்குலேஷன் - Speculation :

எந்த பெரிய சரிவிற்கும் ஸ்பெக்குலேஷன் தான் முக்கிய காரணமாக இருக்கும். சந்தையின் செண்டிமெண்டிற்கு ஏற்றாற் போல ஸ்பேகுலேட்டர்ஸ் (Speculators) தங்களின் வர்த்தகத்தை அமைத்து கொள்வார்கள். அமெரிக்கவின் பொருளாதாரம் கடுமையான தேக்கத்தை எதிர்கொண்டு வருவதாக ஒரு அச்சம் நிலவுகிறது. அமெரிக்காவில் Recession ஏற்படும் பட்சத்தில் அது மிக கடுமையான விளைவுகளை உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும். உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில் உலகின் பொருளாதார சூழலை இது கடுமையாக பாதிக்கும். அமெரிக்கவின் பல நிதி நிறுவனங்கள் சப்-பிரைம் (Sub-prime) காரணமாக மிகவும் கடுமையான இழப்பை அடைந்திருக்கின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் (Wall Street) நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்கள் இழப்புகளை அறிவித்து கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா பொருளாதாரம் கடும் தேக்க நிலையை (Recession) அடையுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தை ஸ்பெக்குலேட்டர்ஸ் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்

இந்தியப் பங்குச்சந்தை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களையே பெரும்பாலும் சார்ந்து இருக்க வேண்டிய ஒரு சூழல் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்தால் பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்ந்து கொண்டே இருக்கும். அதே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விற்க தொடங்கினால் பங்குச்சந்தை கடுமையாக சரிவை எதிர்கொள்ளும். இந்த போக்கினை கடந்த இரு வாரங்கள் சந்தையில் காண முடிந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் சுமார் 5,307.80 கோடி ரூபாய்கள் அளவுக்கு தங்கள் பங்குகளை விற்றுள்ளன. விளைவு சுமார் 3200 புள்ளிகள் அளவுக்கு சென்சக்ஸ் சரிவடைந்துள்ளது

Valuation - பங்குகளின் விலை

இந்தியப் பங்குகளின் விலை மிக அதிகமாக உள்ளது. பிற வளர்ந்து வரும் நாடுகளை ஒப்பிட்டால் இந்தியப் பங்குகளின் விலை அதிகம்.

வரும் நாட்களில் பங்குச்சந்தை எப்படி இருக்கும் ?

உலக அளவில் அமெரிக்க பொருளாதாரம் குறித்த அச்சம் பிற நாட்டின் பங்குச்சந்தைகளை கடுமையாக பாதித்த பொழுதும், இந்தியப் பங்குச்சந்தை எந்த பெரிய சரிவும் இல்லாமல் உயர்ந்து கொண்டே இருந்தது. எனவே இந்த கரெக்‌ஷன் (Correction) எதிர்பார்த்த ஒன்றே. இவ்வளவு பெரிய சரிவு, நீண்ட கால உயர்வுக்கு நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

வரும் நாட்களில் பங்குச்சந்தையில் போக்கு மாறிக் கொண்டே இருக்கும். வெள்ளியன்றும், திங்களன்றும் பங்குச்சந்தை கடுமையாக சரிவடைந்ததால் இன்று - செவ்வாய் பங்குச்சந்தை சற்றே உயரலாம். ஆனால் இந்த வாரம் உயர்வும், சரிவும் மாறிக்கொண்டே இருக்கும்.

Monday, January 21, 2008

கடந்த வார பங்குச்சந்தை

கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தை கடுமையாக சரிவடைந்தது. மும்பை பங்குச்சந்தை - பி.எஸ்.இ 8.71%, தேசிய பங்குசந்தை 8% என ஒரே சரிவு மயமாக சந்தை இருந்தது.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் - FII's பங்குகளை விற்றதே இந்த சரிவிற்கு முக்கிய காரணம்.

பட்ஜெட் வரும் வரை பங்குச்சந்தையில் சரிவுகளும், ஏற்றங்களும் இருக்கும்.

Sunday, January 20, 2008

சலுகை விலை சிமெண்ட் விற்பனை நாளை துவக்கம்

தனியார் ஆலை அதிபர்கள் சலுகை விலையில் வழங்குவதாக ஒப்புக்கொண்ட சிமென்ட் வினியோகம், தமிழகம் முழுவதும் நாளை துவங்குகிறது.சிமென்ட் விலை, தற்போது மூடை ரூ.260 என்ற அளவில் இருந்தது. அதனால் வீடு, கட்டடம் கட்டுவோர் பாதிக்கப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ முயற்சித்தும், விலையை குறைக்க சிமென்ட் ஆலை அதிபர்கள் மறுத்து விட்டனர்.இதையடுத்து, தமிழக அரசு, 'நாட்டுடமை ஆக்குவோம்' என்ற பிரம்மாஸ்திரம் பயன்படுத்தியது. அதற்கு பணிந்த சிமென்ட் ஆலை அதிபர்கள், 'ரூ.200 வீதம் மாதம் 20 லட்சம் மூடை சிமென்ட் விற்கப்படும்' என, முதல்வரிடம் உறுதியளித்தனர்.

இதையேற்ற தமிழக அரசு, பொதுமக்களுக்கு மூடை ரூ.200 விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித் தது. அது பற்றிய அறிவிப்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி தனியார் ஆலைகளில் இருந்து சிமென்ட் மூடையை வாங்கி, ஒவ்வொரு தாலுகா நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வைத்து, வரும் 21ம் தேதி(நாளை) முதல் விற்பனை செய்யப்படும். ஒரு சிமென்ட் மூடையின் விலை அனைத்து வரிகள் உட்பட ரூ.200 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.சிமென்ட் தேவைப்படுவோர், புது கட்டடம் கட்டும் முகவரி, இடத்தின் சர்வே எண், கட்டட அனுமதி பெற்ற வரைபடம், கட்டடம் ஏற்கனவே துவங்கப்பட்டு இருப்பின், தற்போதைய நிலை, ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகலை தாசில்தாரிடம் ஒப்படைத்து, பர்மிட் பெறலாம்.சிமென்ட் பெற அதிகபட்சம் ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் கட்டடம் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 100 மூடைகள் மட்டுமே வழங்கப்படும்.இது குறித்து கட்டுமான பொறியாளர்கள் கூறுகையில், ''அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதால், வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் சிமென்ட் விலையில் மாற்றம் ஏற்படாது''என்றனர்

நன்றி : தினமலர் வர்த்தகம்

டாலர் மதிப்பு மேலும் வீழ்ச்சி: மதுரை கருத்தரங்கில் தகவல்

அமெரிக்க டாலரின் மதிப்பு மேலும் வீழ்ச்சியடையும் என மதுரையில் நடந்த கருத்தரங்கில் பொருளாதார வல்லுனர்கள் பேசினர்.

டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு என்னும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் பொருளாதார வல்லுனர் வெங்கடேஷ் பேசியதாவது: டாலரின் வீழ்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தின் அஸ்திரத்தை நிலைகுலைய செய்துள்ளது. ரூ.45ல் இருந்த அதன் மதிப்பு ரூ.39 என்ற அளவிற்கு வந்துள்ளது. இந்த சரிவு இன்னும் அதிகரிக்கும். இதனால் பங்குசந்தை, ரியல் எஸ்டேட் போன்ற தொழில்கள் இந்த ஆண்டில் வீழ்ச்சியடையும். இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கும். இதனால் வெளிநாடுகளில் பலர் வேலைகளை இழக்கும் நிலை ஏற்படும். இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதால் அதிக லாபம் பெறமுடியாத நிலை உருவாகும். டாலர் வீழ்ச்சியால் தங்கம், வெள்ளி போன்ற மெட்டல் பொருட்களின் விலை மட்டும் அதிகரிக்கும். இதன் பாதிப்புகள் ஏற்படாதவாறு மத்திய அரசு 2 ஆண்டிற்குள் புதிய கொள்கைகளை வகுக்க வேண்டும். தொழில் அதிபர்களும் வெளிநாடுகளில் பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட்டு உள்நாட்டு சந்தைகளை நம்பி வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். மடீட்சியா தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலர் சீத்தாராமன், இணை செயலர் பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

நன்றி : தினமலர் வர்த்தகம்

டாடா கார் மட்டுமில்லே மம்தா ஓவியமும் ரூ.1 லட்சம்

டாடா கார் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்த 'நானோ' காரின் விலை ரூ. ஒரு லட்சம் என்று எல்லாருக்கும் தெரியும்; டாடாவை எதிர்த்து போராடிய திரிணமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியின் ஓவியத்தின் விலையும் ரூ ஒரு லட்சம் தான்.

பார்ப்பதற்கு அமைதியானவர் மம்தா; மேடையேறி விட்டால் புலியாக பாய்ந்து, சிங்கமாக கர்ஜிப்பார். அதுபோல, அவர் உடுத்தும் புடவை, 'பளீச்' என்று எப்போதும் இருக்காது; ஆனால், அவர் உள்ளம் எந்த அளவுக்கு பிரகாசமானது என்பதை அவர் ஓவியங்கள் காட்டும். அவர் ஒரு அரசியல்வாதி என்று தான் பலருக்கு தெரியும்; சிறந்த ஓவியர் என்று தெரிந்தவர் வெகு சிலரே. சமீபத்தில் அவர் இரண்டாவது முறையாக, தன் ஓவியக்கண்காட்சியை , கோல்கட்டாவில் நடத்தினார்; அவர் வரைந்த 45 ஓவியங்கள், காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன. இந்த ஓவியங்களின் ஒவ்வொன்றும் ரூ. ஒரு லட்சத் திற்கு விற்கப்பட்டன.

இதுகுறித்து மம்தா கூறுகையில்,'நான் பயிற்சி பெற்ற ஓவியர் அல்ல; ஏதோ மனதுக்கு பிடித்ததை தீட்டுவேன். எனக்கு இரவில் தான் நேரம் கிடைக்கிறது. 'கேன்வாஸ்' துணியை வைத்து கிறுக்க ஆரம்பித்தேன். இதுவே எனக்கு சிறந்த பொழுதுபோக்காக மாறியது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன்' என்றார்.

நன்றி : தினமலர் வர்த்தகம்