Sunday, January 20, 2008

சலுகை விலை சிமெண்ட் விற்பனை நாளை துவக்கம்

தனியார் ஆலை அதிபர்கள் சலுகை விலையில் வழங்குவதாக ஒப்புக்கொண்ட சிமென்ட் வினியோகம், தமிழகம் முழுவதும் நாளை துவங்குகிறது.சிமென்ட் விலை, தற்போது மூடை ரூ.260 என்ற அளவில் இருந்தது. அதனால் வீடு, கட்டடம் கட்டுவோர் பாதிக்கப்பட்டனர். மத்திய, மாநில அரசுகள் எவ்வளவோ முயற்சித்தும், விலையை குறைக்க சிமென்ட் ஆலை அதிபர்கள் மறுத்து விட்டனர்.இதையடுத்து, தமிழக அரசு, 'நாட்டுடமை ஆக்குவோம்' என்ற பிரம்மாஸ்திரம் பயன்படுத்தியது. அதற்கு பணிந்த சிமென்ட் ஆலை அதிபர்கள், 'ரூ.200 வீதம் மாதம் 20 லட்சம் மூடை சிமென்ட் விற்கப்படும்' என, முதல்வரிடம் உறுதியளித்தனர்.

இதையேற்ற தமிழக அரசு, பொதுமக்களுக்கு மூடை ரூ.200 விலையில் சிமென்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித் தது. அது பற்றிய அறிவிப்பு, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.அதன்படி தனியார் ஆலைகளில் இருந்து சிமென்ட் மூடையை வாங்கி, ஒவ்வொரு தாலுகா நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் வைத்து, வரும் 21ம் தேதி(நாளை) முதல் விற்பனை செய்யப்படும். ஒரு சிமென்ட் மூடையின் விலை அனைத்து வரிகள் உட்பட ரூ.200 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.சிமென்ட் தேவைப்படுவோர், புது கட்டடம் கட்டும் முகவரி, இடத்தின் சர்வே எண், கட்டட அனுமதி பெற்ற வரைபடம், கட்டடம் ஏற்கனவே துவங்கப்பட்டு இருப்பின், தற்போதைய நிலை, ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகலை தாசில்தாரிடம் ஒப்படைத்து, பர்மிட் பெறலாம்.சிமென்ட் பெற அதிகபட்சம் ஆயிரம் சதுர அடிக்கு மிகாமல் கட்டடம் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 100 மூடைகள் மட்டுமே வழங்கப்படும்.இது குறித்து கட்டுமான பொறியாளர்கள் கூறுகையில், ''அரசு சார்பில் குறிப்பிட்ட அளவு மட்டுமே வழங்கப்படுவதால், வெளி மார்க்கெட்டில் விற்கப்படும் சிமென்ட் விலையில் மாற்றம் ஏற்படாது''என்றனர்

நன்றி : தினமலர் வர்த்தகம்

0 comments: