Tuesday, January 22, 2008

இந்தியப் பங்குச்சந்தைகளின் சரிவிற்கு காரணம் என்ன ?

நேற்று இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவை எதிர்கொண்டது. மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்சக்ஸ், 1409 புள்ளிகள் சரிவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 496 புள்ளிகள் சரிவடைந்தது.

புள்ளிகள் கணக்கில் பார்த்தால் இந்தளவுக்கு பெரிய சரிவு இது வரை நடந்தது இல்லை. சதவீத கணக்கில் பார்த்தால் சுமார் 7% சதவீதம் சரிவு. நேற்றைய வர்த்தகத்தின் ஒரு கட்டத்தில் சென்சக்ஸ் சுமார் 16,951 புள்ளிகள் என மிக மோசமான சரிவு நிலையில் இருந்தது. இந்த சரிவை ஹர்ஷத் மேத்தா ஊழல் சமயத்தில் நேர்ந்த சரிவிற்கு ஒப்பிடலாம். வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் வர்த்தகம் நடைபெற்ற பொழுது சுமார் 700 புள்ளிகள் அளவுக்கு சென்சக்ஸ் உயர்ந்தது. முடிவில் சென்சக்ஸ் 1409 புள்ளிகள் சரிவடைந்தது.

நேற்றைய சரிவு முதலீட்டாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங் முதலிட்டாளர்கள் அச்சம் அடைய தேவையில்லை என்று கூறும் அளவுக்கு மிக மோசமான சரிவு என்று இதனை கூறலாம்.

இவ்வளவு மோசமான சரிவு ஏற்பட முக்கிய காரணங்கள் :

ஆர்பிட்ரேஜ் - Arbitrage :

ஒரு இடத்தில் விலை குறைவாக இருக்கும் ஒரு பொருள், வேறு இடத்தில் விலை அதிகமாக இருந்தால் என்ன செய்வோம் ? வியபாரியாக இருந்தால் விலை குறைவான இடத்தில் வாங்கி, விலை அதிகமான இடத்தில் விற்கலாம். இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச்சந்தையில் கூட இது போல செய்ய முடியும். உதாரணமாக மும்பை பங்குச்சந்தையில் டாடா ஸ்டீல் பங்குகளின் விலை 722 என்று இருந்து, தேசிய பங்குச்சந்தையில் விலை 735 ரூபாயாக இருந்தால், மும்பை பங்குச்சந்தையில் வாங்கி, தேசிய பங்குச்சந்தையில் விற்கலாம். இதனால் பங்கு ஒன்றுக்கு ரூபாய் 13 லாபமாக கிடைக்கும். இன்றைக்கு மும்பை பங்குச்சந்தை குறியீடு கடுமையாக சரிந்தமைக்கு இந்த வர்த்தக முறையும் ஒரு காரணம். ஆனால் வர்த்தகம் நடந்தது பங்குகளில் அல்ல. பங்குகளை அடிப்படையாக கொண்ட டிரைவேட்டிவ்ஸ் வர்த்தகத்தால் (F&O) தான் இத்தகைய கடுமையான சரிவு.

பங்குகள் கடுமையாக சரிய தொடங்கிய பொழுது இம் மாத நிப்டி பியூட்சர்சுக்கும் (Nifty Futures), நிப்டி குறியீட்டிற்கும் இடையே அதிக வித்யாசம் இருந்தது. அதாவது நிப்டி பியூட்சர்ஸ் குறைவான விலையில் இருந்தது (Nifty futures at discount). இதனை பயன்படுத்திக் கொண்டு டிரேடர்கள் (traders) பங்குச்சந்தையில் விற்று, நிப்டி பியூட்சர்சை வாங்க தொடங்கினர். அதிகளால் விற்பனை இருந்ததால் குறியீடு கடுமையாக சரிந்தது.

(டிரைவேட்டிவ்ஸ் வர்த்தகம் குறித்து வரும் நாட்களில் எழுதப் போகிறேன்)

ஸ்பெக்குலேஷன் - Speculation :

எந்த பெரிய சரிவிற்கும் ஸ்பெக்குலேஷன் தான் முக்கிய காரணமாக இருக்கும். சந்தையின் செண்டிமெண்டிற்கு ஏற்றாற் போல ஸ்பேகுலேட்டர்ஸ் (Speculators) தங்களின் வர்த்தகத்தை அமைத்து கொள்வார்கள். அமெரிக்கவின் பொருளாதாரம் கடுமையான தேக்கத்தை எதிர்கொண்டு வருவதாக ஒரு அச்சம் நிலவுகிறது. அமெரிக்காவில் Recession ஏற்படும் பட்சத்தில் அது மிக கடுமையான விளைவுகளை உலகப் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தும். உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக அமெரிக்கா இருந்து வரும் நிலையில் உலகின் பொருளாதார சூழலை இது கடுமையாக பாதிக்கும். அமெரிக்கவின் பல நிதி நிறுவனங்கள் சப்-பிரைம் (Sub-prime) காரணமாக மிகவும் கடுமையான இழப்பை அடைந்திருக்கின்றன. அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் (Wall Street) நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்கள் இழப்புகளை அறிவித்து கொண்டுள்ள நிலையில் அமெரிக்கா பொருளாதாரம் கடும் தேக்க நிலையை (Recession) அடையுமோ என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்த அச்சத்தை ஸ்பெக்குலேட்டர்ஸ் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தியிருக்கின்றனர்.

வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்

இந்தியப் பங்குச்சந்தை வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களையே பெரும்பாலும் சார்ந்து இருக்க வேண்டிய ஒரு சூழல் உள்ளது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியப் பங்குச்சந்தையில் அதிகளவில் முதலீடு செய்தால் பங்குச்சந்தையில் புள்ளிகள் உயர்ந்து கொண்டே இருக்கும். அதே வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை விற்க தொடங்கினால் பங்குச்சந்தை கடுமையாக சரிவை எதிர்கொள்ளும். இந்த போக்கினை கடந்த இரு வாரங்கள் சந்தையில் காண முடிந்தது. கடந்த சில நாட்களில் மட்டும் இந்த நிறுவனங்கள் சுமார் 5,307.80 கோடி ரூபாய்கள் அளவுக்கு தங்கள் பங்குகளை விற்றுள்ளன. விளைவு சுமார் 3200 புள்ளிகள் அளவுக்கு சென்சக்ஸ் சரிவடைந்துள்ளது

Valuation - பங்குகளின் விலை

இந்தியப் பங்குகளின் விலை மிக அதிகமாக உள்ளது. பிற வளர்ந்து வரும் நாடுகளை ஒப்பிட்டால் இந்தியப் பங்குகளின் விலை அதிகம்.

வரும் நாட்களில் பங்குச்சந்தை எப்படி இருக்கும் ?

உலக அளவில் அமெரிக்க பொருளாதாரம் குறித்த அச்சம் பிற நாட்டின் பங்குச்சந்தைகளை கடுமையாக பாதித்த பொழுதும், இந்தியப் பங்குச்சந்தை எந்த பெரிய சரிவும் இல்லாமல் உயர்ந்து கொண்டே இருந்தது. எனவே இந்த கரெக்‌ஷன் (Correction) எதிர்பார்த்த ஒன்றே. இவ்வளவு பெரிய சரிவு, நீண்ட கால உயர்வுக்கு நல்லது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

வரும் நாட்களில் பங்குச்சந்தையில் போக்கு மாறிக் கொண்டே இருக்கும். வெள்ளியன்றும், திங்களன்றும் பங்குச்சந்தை கடுமையாக சரிவடைந்ததால் இன்று - செவ்வாய் பங்குச்சந்தை சற்றே உயரலாம். ஆனால் இந்த வாரம் உயர்வும், சரிவும் மாறிக்கொண்டே இருக்கும்.

12 comments:

Anonymous said...

Very good Market Commentry. Nice to read such commentries in Tamil

ASIA Markets seems bad and this can reflect in the Indian Markets too...

Anonymous said...

Very good article,
these informations are very useful for a person who is watching market from outside. (like me). please write in detail about F&O and specualtion in more detail manner.Thanks

Anonymous said...

Can you about Recession of USA Economy?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.நிறைய எழுதுங்கள். முக்கியமா இந்த FUTURES & OPTIONS பற்றி,ஸ்பெகுலேசன் பற்றி.

மங்களூர் சிவா said...

ம்

நல்ல பதிவு. இன்னைக்கு மார்க்கெட் கமெண்டரி நாளைக்கு வருமா?

தொடர்ந்து எழுதுங்கள்

வாழ்த்துக்கள்.

Anonymous said...

useful informations.. keep it up.. Thanks..

Anonymous said...

good post.

Anbu(parasparfund@gmail.com) said...

அருமை, தொடர்ந்து எழுதுங்கள்.

ILA (a) இளா said...

நல்லதொரு பதிவு

புல்லிஷ் தமிழன் ( BULLISH TAMILAN) said...

நன்றி நண்பர்களே

வவ்வால் said...

எப்பலாம் பங்கு சந்தை சரியுதோ அப்போ எல்லாம் இதே காரணத்தை தான் பெரும்பாலும் சொல்றாங்க, ஏதோ அப்போ அப்போ சில காரணங்கள் மட்டும் மாறும் ஆனால் 75% இப்போது சொல்லும் காரணமே வரும், வேற என்ன சொல்ல இதான் எப்போதும் நடக்கும்னு சொல்றிங்களா அதுவும் சரிதான்!

மார்க்கெட் மேல போகும் போதே எனக்கு தெரியும் ஒரு சரிவு வரும்னு சிலர் ரொம்ப தீர்க்க தரிசிப்போல சொல்லிப்பாங்க, அடக்கெரகம் எப்போ சரிவு வரும்னு சரியா சொல்லித்தொல்லைக்க மாட்டியானு யாரும் கேட்கக்கூடாது :-))

தென்றல் said...

எளிமையா புரியும்படியாக எழுதியிருக்கீங்க!

Font size கொஞ்சம் பெரிசு பண்ணினால், படிக்க இன்னும் எளிதா இருக்கும். நன்றி!